ஐக்கிய ராஜ்ஜியத்தில் வெளிநாட்டிலிருந்து வந்து
குடியேறிய சில சமூகங்களிடையே பெண்களின் பிறப்புறுப்பில் தோலை வெட்டி
எடுத்துவிடும் வழக்கம் நீடிப்பதைத் தடுக்க பொலிசாரும் சமூகப் பணியாளர்களும்
தவறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சமூகத்தவரின் மத இன உணர்வை
புண்படுத்தும் செயலாக ஆகிவிடுமோ என்று தயங்கியே இதற்கு எதிராக நடவடிக்கை
எடுக்க பொலிசாரும் சமூக சேவைப் பிரிவுகளும் தடுமாறுகிறார்கள் என அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள்
சிலவற்றில் பழங்காலத்து கலாச்சார பழக்க வழக்கங்களின் ஒரு பகுதியாக பெண்
பிள்ளைகளின் பிறப்புறுப்பிலிருந்து தோலை வெட்டி எடுக்கும் வழக்கம்
நீடிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு என பிரிட்டிஷ் அரசாங்கம் மூன்றரை கோடி
பவுண்டுகளை செலவுசெய்துவருகிறது.
அப்படியிருக்கும்போது ஐக்கிய
ராஜ்ஜியத்துக்குள்ளேயே இந்த வழக்கம் நீடிப்பது தங்கள் செயற்பாடுகளை
கேள்விக்குள்ளாக்கி குலைப்பதாக இருக்கிறது என சர்வதேச அபிவிருத்திக்கான
பிரிட்டிஷ் நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.
1985ஆம் ஆண்டே இந்த வழக்கத்துக்கு பிரிட்டனில் சட்டத் தடை கொண்டுவரப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
பிரிட்டிஷ் பிரஜைகளாக இருந்தாலும் சரி பிரட்டனில்
நிரந்தமாகக் குடியேறிவர்களாக இருந்தாலும் சரி, வெளிநாடுகளுக்கு சென்றும்கூட
அவர்கள் தமது பெண் பிள்ளைகளுக்கு பிறப்புறுப்பில் தோலை வெட்டி எடுக்கும்
சடங்கை செய்யக்கூடாது என இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.
ஆனால் பிரிட்டனுக்குள்ளேயே சுமார் இருபதாயிரம் பெண் பிள்ளைகளுக்கு இந்த சடங்கு செய்யப்படுகிற ஆபத்து இருக்கிறது.
ஆனாலும் இதுவரை எவர் மீதும் சட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது அனுமதிக்க முடியாத தவறு என நாடாளுமன்ற
உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்.
4 வயது முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட சிறுமிகள் இந்தக் கஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறாக பிறப்புறுப்பில் தோல் வெட்டி
எடுக்கப்பட்டவர்களுக்கு பிற்பாடு மாத விடாய்ப் பிரச்சினைகளும் மகப்பேறு
பிரச்சினைகளும் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பிறப்புறுப்பில் தோல் வெட்டி எடுக்கும் சடங்கிற்கு
உட்படுத்தப்பட்ட சிறுமிகள் பற்றிய 148 சம்பவங்களைக் கேள்விப்பட்டிருந்தும்
அவற்றில் ஒரு சிறுமியைக்கூட பாதுகாப்பு தேவைப்படும் சிறுவர்களுக்கான
பட்டியலில் பொலிசாரோ, சமூக உதவி அமைப்புகளோ சேர்த்திருக்கவில்லை என்ற நிலை
தமக்கு கவலை அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூறுகிறது.
இந்த சடங்கிற்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் சுமார் 66 ஆயிரம் பேர் ஐக்கிய ராஜ்ஜியத்தில் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.
ஆண்களின் பிறப்புறுப்பில் முன் தோல் நீக்கம்
செய்வதால் ஆரோக்கிய ரீதியில் சில நன்மைகள் இருப்பதாக
தெரிவிக்கப்படுகின்றபோதிலும், பெண்களின் பிறப்புறுப்பில் தோலை வெட்டி
எடுப்பதால் உடல்நலத்துக்கு நன்மை என்று ஒன்றும் இல்லை எனு மருத்துவர்கள்
கூறுகின்றனர்.
பிறப்புறுப்பில் பாதிப்பு ஏதும் இல்லாத பெண்களின்
ஆரோக்கியமான திசுக்களை வெட்டி எடுப்பதால் அவர்களுடைய உடல்களின் இயல்பான
இயக்கங்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment